Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணியை நீக்க ராமதாஸ் முடிவா? ஆக. 17ல் பாமக சிறப்பு பொதுக்குழு: மகளுக்கு புதிய பதவி; அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு

திண்டிவனம்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 17ம் தேதி பட்டானூரில் கூடுவதாக பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அன்புமணியை நீக்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகளுக்கு புதிய பதவியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பட்டானூரில் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின்போது மோதல் பகிரங்கமாக மேடையிலேயே வெடித்தது.

இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்களான மாநில பொருளாளர் திலகபாமா, பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பாலு மற்றும் மாவட்ட செயலாளர்கள் 82 பேரும், 62 பேரும் மாவட்ட தலைவர்கள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் 3 எம்எல்ஏக்களின் கட்சி பதவி நீக்கினார். அவருக்கு போட்டியாக அன்புமணியும் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கினார். இதையடுத்து, இருவரும் தனித்தனியாக மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வந்தனர்.

மேலும், கட்சிக்கு நான்தான் தலைவர், தங்கள் அனுப்பிய புதிய நிர்வாகிகளின் பட்டியலை அங்கீகரிக்க வேண்டும், மாம்பழம் சின்னம் எங்களுக்கே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி முறையிட்டுள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஆதரவை திரட்டும் வகையில் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை அறிவித்தார். அதற்கு ராமதாஸ் சார்பில் ஆட்சேபனை தெரிவித்து டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரிடம் மனு அளித்தனர். அதையும் மீறி நடை பயணத்தை அன்புமணி தொடர்வதால் அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவில் ராமதாஸ் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில், ராமதாஸ் பெயரில் பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுக்கிணங்க பாமக சிறப்பு பொதுக்குழு வருகின்ற 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம் புதுச்சேரி செல்லும் வழியில் பட்டானூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும். இந்த பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாமக தைலாபுரம் தலைமை நிலையத்திலிருந்து ராமதாஸ் லட்டர் பேடில் வெளியான இந்த அறிவிப்பில் யாருடைய கையெழுத்தும் இடம்பெறவில்லை. அன்புமணியின் செயலால் மிகுந்த மன உளைச்சலில் ராமதாஸ் இருப்பதாக தகவல் கசிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென சென்னை புறப்பட்டுச் சென்றார் ராமதாஸ். அவர் மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி தேர்தல் ஆணையத்தின் முழு அங்கீகாரத்தை பெற ராமதாஸ் தடாலடி முடிவை எடுத்திருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு பொதுக்குழுவின்போது, அன்புமணி பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார் என்றும், ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி பரசுராமன் நிர்வாக பொறுப்பில் புதியதாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பாமக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அன்புமணி பங்கேற்காத இந்த சிறப்பு பொதுக்குழு செல்லுமா, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா அல்லது புறக்கணிப்பார்களா? என்பதை பொறுத்தே கட்சி முழுமையாக யார் பக்கம் என்பது நிரூபணமாகும் என கூறப்படுகிறது.