பூம்புகார் மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாரா? போக... போக.... தெரியும் ஒரே பாட்டு பாடும் ராமதாஸ்
சீர்காழி: பூம்புகார் மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாரா என கேட்டதற்கு போக..போக... தெரியும் என ஒரே பாட்டை ராமதாஸ் பாடினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் ஆக.10ம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற உள்ள பூம்புகார் கடற்கரை பகுதியில் உள்ள சுற்றுலா தல பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்க அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த மகளிர் மாநாடு வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மகளிர் கலந்து கொள்ள உள்ளனர். பெண்களே ஆக்கும், காக்கும் சக்தியாக போற்றப்படுகின்றனர். வீட்டிற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் பெண்களே வெளிச்சமாக திகழ்கின்றனர். இந்த மாநாட்டில் பண்டையகால தமிழர்களின் வரலாற்றை போற்றும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பூம்புகார் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தபட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் நலன்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அன்புமணி தைலாபுரம் வந்தது குறித்து, யாருடன் கூட்டணி?, தேர்தல் ஆணையத்தில் முறையீடுவீர்களா? கோயில் நிதியில் கல்லூரிகள் கட்டலாமா என பல கேள்விகளை நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராமதாஸ் கூறுகையில், ‘பாமக எந்த அணியில் சேருகிறதோ, அந்த அணி இதுவரை இல்லாத வெற்றியை பெறும். ஏனென்றால் அப்படிபட்ட பலமான கூட்டணி. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களோ, பணமோ, அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிக்கு பயன்படுத்துவது தவறில்லை. மத்திய அரசு கல்விக்கான நிதியை வலியுறுத்தி கேட்டு பெறுவோம். கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில், இனிமேல் சரியாக, முறையாக, உரிய நேரத்தில் பதிவு செய்யப்படும். இந்த மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்வது போக போக தெரியும்’ என்றார்.
தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, குழப்பமே இல்லை. உங்களிடம் தான் குழப்பம் உள்ளது என்று ராமதாஸ் கூறினார். ரொம்ப வருஷமாக மகளிர் மாநாடு நடத்தப்படவில்லை. உங்கள் மகளை தலைவராக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறதா என்று கேட்டதற்கு, அப்படி ஒன்றுமில்லை. உண்மையை தவிர வேறு எல்லாம் நிருபர்களாகிய நீங்கள் பேசுகிறீர்கள் என்றார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா என கேட்டதற்கு, மேலே பறந்து சென்ற 10 காக்காக்களில், 5 காக்கா வெள்ளை காக்கா பறந்து சென்றது. அந்த வெள்ளை காக்கா தான் திமுகவுடன், பாமக கூட்டணி என உங்களிடம் தெரிவித்திருக்கும் என எண்ணுகிறேன் என்றார். அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார். அவர் அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என கேட்டதற்கு, இரண்டு விரலை காட்டி இரண்டுமே என்றார்.
* நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் என் பக்கம் நிற்கவில்லை - ராமதாஸ் கேள்வி
கடலூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 46 ஆண்டு காலமாக உங்களுக்காக போராடி வந்திருக்கிறேன். நீங்கள் ஒன்றே ஒன்றை செய்திருந்தால் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு நான் கேட்கவேண்டியதில்லை. உங்களிடம் இருக்கின்ற விலை மதிக்கமுடியாத வாக்கை ஒன்றே ஒன்று என அனைவரும் போட்டீர்கள் என்றால் நாங்கள் 10.5 என்று கதற வேண்டியதில்லை. நம்மிடம் 40 எம்எல்ஏக்கள் இருந்தார்கள்.
இப்போது 5 பேர்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் நம்முடைய சமுதாயத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகம் யார் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ம பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ். இன்னொரு பையன் கலெக்டராக வருவதாக சொல்லி இருக்கிறான். அவன் கலெக்டராக வந்தால் நானே அவனுக்கு ஒருநாள் கார் ஓட்டுவேன் என சொல்லி இருக்கிறேன். என் பேச்சை ஏன் இவ்வளவு நாள் கேட்கவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன். டாக்டர் வேலையை விட்டுவிட்டு உங்களுக்காக தான் நான் போராடினேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வந்துள்ளேன். நீங்கள் ஏன் என் பக்கம் நிற்கவில்லை. உங்களிடம் இருக்கும் ஓட்டை, ஆயுதத்தை ஏன் சரியாக நீங்கள் பயன்படுத்த மாட்டேங்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன்
கும்பகோண்டம், விருத்தாசலம் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தைலாபுரம் தோட்டம் திரும்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாக கூறினார்.அவரிடம், உங்களிடன் நீண்டநாள் கனவான 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி அன்புமணி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? என கேட்டதற்கு, நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார். 10.5 சதவீதம் உங்களது கனவு என மீண்டும் கேள்வி எழுப்பியதற்கு, நீங்கள் ஆதரவு கொடுங்கள் என கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.