Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கா 25 சதவீத வரி விதிப்பு தேசிய நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய நலனைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய பொருட்களுக்கு இன்று முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை: அமெரிக்கா விதித்துள்ள புதிய வரியின் தாக்கங்களை அரசு ஆராய்ந்து வருகிறது. நமது ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உட்பட அனைத்து தரப்பினருடன் இணைந்து நிலைமையை மதிப்பிடும் பணி நடக்கிறது. நமது விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் அனைத்துப் பிரிவுகளின் நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நமது தேசிய நலனைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். இவ்வாறு தெரிவித்தார்.

தவறானது: அமெரிக்காவின் வரி அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறிய கருத்துக்களுக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,’வர்த்தக அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டார். அவர் செய்ததெல்லாம் முற்றிலும் தவறான சுய-வாழ்த்துக்கள் மட்டுமே. அந்த அறிக்கையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறியது, இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது, ரஷ்யா மற்றும் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான கூடுதல் அபராதங்கள் ஆகியவற்றால் எழுந்த உண்மையான பிரச்னைகள் குறித்து எந்தக் கருத்தும் இல்லை. இந்திய வணிகர்களின் கவலைகள் மற்றும் உணர்வுகள் கவனிக்கப்படவில்லை. இந்தியா தற்போது அமெரிக்காவுடன் புதிய மற்றும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி, அதிபர் டிரம்புடனான தனது மிகவும் பெருமையான தனிப்பட்ட நட்பை நம்பியிருந்தார். இது முற்றிலும் வெற்றுத்தனம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வினோதமான பணமதிப்பிழப்பு மற்றும் அடிப்படையில் குறைபாடுள்ள ஜிஎஸ்டியின் இரட்டை அதிர்ச்சிகளிலிருந்து இந்தியப் பொருளாதாரம் ஒருபோதும் உண்மையில் மீளவில்லை. தற்போதைய தனியார் நிறுவன முதலீட்டு நிலைகள் மற்றும் தற்போதைய தனியார் நுகர்வு நிலைகளால் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் துரிதப்படுத்தப்படாது. இந்த இரட்டைப் பற்றாக்குறைக்கு மோடி அரசாங்கத்தின் சொந்தக் கொள்கைகளே காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரூ.85 ஆயிரம் கோடிக்கு ஆபத்து: அமெரிக்க வரி விதிப்பால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக வைக்கப்பட்டுள்ள ரூ.85 ஆயிரம் கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதன ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.85 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில்,’ இந்தியா தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்கும். அமெரிக்கா சார்பில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும் நமது தொலைத்தொடர்பு சாதன ஏற்றுமதி போட்டித்தன்மையுடன் இருக்கும்’ என்றார்.

* அமெரிக்காவின் ஆணவம்

இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும், அதை செத்த பொருளாதாரம் என்று அழைப்பது அமெரிக்காவின் ஆணவம் அல்லது அறியாமை என்று சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்தார்.

* இன்னும் மவுனம் ஏன்? மோடிக்கு கார்கே கேள்வி

இந்தியா குறித்து டிரம்ப் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து மோடி இன்னும் மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,’ இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் கூறிய கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மவுன விரதம் அனுசரித்தார். தற்போது இந்தியா குறித்து டிரம்ப் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் பதில் அளிக்காமல் மோடி இன்னும் அமைதியாக இருப்பாரா?. எங்களுக்கு தேசமே முதன்மையானது. நாங்கள் எப்போதும் தேசத்துடன் இருக்கிறோம். டிரம்ப் இந்தியாவை அச்சுறுத்துகிறார். இப்போதும் பிரதமர் மோடி ஏன் மவுனமாக அமர்ந்திருக்கிறார்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் தந்திரம்: சசிதரூர் கருத்து

இந்தியா மீது 25 சதவீத வரி மற்றும் அபராதங்களை அமெரிக்கா விதித்து இருப்பது வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மேற்கொண்டுள்ள தந்திரம் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ அமெரிக்காவுடன் சிறந்த ஒப்பந்தத்தைக் கண்டறிய நாம் வலுவான ஆதரவை வழங்க வேண்டும். இருப்பினும், ஒரு நல்ல ஒப்பந்தம் சாத்தியமில்லை என்றால் நாம் அதில் இருந்து வெளியேற வேண்டும். இன்றைய பாகிஸ்தானில் அதிக அளவில் எண்ணெய் இருப்பு இருப்பதாக எந்த செய்தியையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அமெரிக்கர்கள் பார்க்க விரும்புகிறார்கள், எனவே அவர்கள் பார்க்கட்டும்’ என்றார்.

* ராகுல்காந்திக்கு பா.ஜ கண்டனம்

பா.ஜ ஐடி துறைத் தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவு: இந்திய பொருளாதாரம் செத்துப்போன பொருளாதாரம் அல்ல. இது ஒரு எழுச்சி பெறும், மீள்தன்மை கொண்ட இந்தியா. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பிட தொடர்ச்சியான முயற்சிகள் செய்வது ராகுல்காந்தியின் வெறும் அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கடுமையாக உழைக்கும் 140 கோடி இந்தியர்களுக்கும் இது நேரடி அவமானம். ராகுல் காந்தி உண்மையில் யாருக்காகப் பேசுகிறார்? இந்தியாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெளிநாட்டு பிரச்சாரத்தை அவர் ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறார்? இந்த மனப்பான்மை இனி வேண்டாம். புதிய இந்தியா தன்னைத்தானே நம்புகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.