Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெனிஸ் நகரத்தில் நடந்த எதிர்ப்புக்கு மத்தியில் 61 வயதில் 55 வயது மாஜி டிவி நிருபரை கரம்பிடித்த அமேசான் நிறுவனர்: டிரம்பின் மகள் உட்பட பிரபலங்கள் பங்கேற்பு

வெனிஸ்: மிதக்கும் வெனிஸ் நகரத்தில் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் நிறுவனர் திருமணம் நடந்தது. அவர் முன்னாள் டிவி நிருபரை கரம் பிடித்தார். உலகின் பெரும் கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் திருமணக் கொண்டாட்டங்களால், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ் நகரம் ஒருபுறம் களைகட்டியிருந்தாலும், மறுபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏற்கனவே மிதக்கும் நகரத்தில், கோடீஸ்வரர்களின் இத்தகைய ஆடம்பரக் கொண்டாட்டங்கள் தேவையா? எனக் கேள்வி எழுப்பி, உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘பெசோஸ் வேண்டாம்’, ‘கோடீஸ்வரர்களுக்கு வரி விதி’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், நகரின் முக்கிய இடங்களில் நியான் விளக்குகளில் எதிர்ப்பு வாசகங்களை ஒளிரச் செய்தும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், இந்தத் திருமணத்திற்காக நூற்றுக்கணக்கான தனியார் விமானங்கள் வந்து செல்வதால் ஏற்படும் கார்பன் மாசுபாட்டையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (61) - முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் லாரன் சான்செஸ் (55) ஆகியோரின் திருமணம், நேற்று வெனிஸில் உள்ள சான் ஜார்ஜியோ மேஜியோரே தீவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

கிம் கர்தாஷியன், ஓப்ரா வின்ஃப்ரே, ஆர்லாண்டோ ப்ளூம், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், ஜோர்டான் ராணி ரானியா உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில், புகழ்பெற்ற ஓபரா பாடகர் ஆண்ட்ரியா போசெல்லியின் மகன் மேட்டியோ போசெல்லி இசை நிகழ்ச்சி நடத்தினார். திருமணத்திற்குப் பிறகு, லாரன் சான்செஸ் தனது இன்ஸ்டாகிராம் பெயரை ‘லாரன்சான்செஸ்பெசோஸ்’ என மாற்றி, திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தத் திருமணத்திற்காக வெனிஸ் நகரத்திற்கு ஜெப் பெசோஸ் சுமார் 3.5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்ததாகவும் கூறப்படுகிறது.