Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டணிக்கு நாங்க யாரையும் கூப்பிடல... மோடி தமிழகம் வர்றாரா? எனக்கு தெரிந்தா சொல்றேன்...எடப்பாடி பேட்டியால் பாஜ தலைவர்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 46 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு சுமார் 15 லட்சம் பொதுமக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய வரவேற்பு ஆரவாரம் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி இதுவரை தெரியவில்லை. பத்திரிகையில் தான் வந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் கிடைக்கவில்லை. எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பகுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார் என்ற முழு விவரம் தெரியவில்லை. விவரம் கிடைத்தவுடன் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தெரிவிக்கப்படும். முழுவிவரம் கிடைத்தால் தான் எந்த இடத்தில் சந்திப்பது என்று நேரம் கேட்கப்படும். விசிக, தவெக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேனா. 46 சட்டமன்ற தொகுதிகளிலும் பேசியுள்ளேன், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளேன், எங்கேயாவது நான் கூட்டணிக்கு அவர்களை அழைத்தேனா.

அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கூறியதை எல்லாம் கேள்வியாக கேட்டால் யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் கூற முடியாது. பெரிய கட்சி கூட்டணிக்கு வரும்போது நான் கூறுகின்றேன். அதிமுக- பாஜ கூட்டணியை வெளியில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் தான் உடைக்க நினைக்கின்றனர். வெளியே தவறுதலாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அனைத்தும் தெரிந்தும் தெரியாததை போல் கேள்வி கேட்கிறீர்கள்.

இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அமித்ஷா. அவர் வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் மோடியை திருச்சியில் எடப்பாடி தனியாக சந்திக்க நேரம் கேட்டு உள்ள நிலையில், மோடி வருவது தெரியாது என அவர் அளித்துள்ள பேட்டியால் பாஜ தலைவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

* கூட்டணியில் இருப்பதாக டிடிவி மட்டும்தான் சொல்றாரு...

எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘டிடிவி தினகரன் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பாஜ கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதாக அவர் மட்டும் கூறுகிறார். அதற்கு நாங்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் அதிமுக பாஜ- கூட்டணி என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். சிலவற்றை தான் ஊடகத்தில் பேச முடியும். சிலவற்றை பேச முடியாது. ஒரு கட்சி என்றால் சிலவற்றை வெளிப்படுத்தலாம். சிலவற்றை வெளிப்படுத்த முடியாது. எல்லாமே வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னால் அது நடக்காது’ என்றார்.