Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து பருவநிலை மாற்றங்களையும் துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

சென்னை: அனைத்து பருவநிலை மாற்றங்களையும் துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று முன்தினம் இரவு, மதுரையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இம்மாதம் ஜூலை 30ம்தேதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள், விண்வெளியில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள், மிக முக்கியமானது. இதில் இரண்டு முக்கிய அமைப்புகள் உண்டு. எஸ் பேண்ட் சிந்தடிக் ஆப்ரசர். இது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மற்றொன்று எல் பேண்ட் சிந்தடிக் அப் ரசர். இது யுஎஸ்ஏவில் தயாரிக்கப்பட்டது.

சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் என்றால், மேகமூட்டங்கள் இருந்தாலும், மழை பெய்து கொண்டு இருந்தாலும், அனைத்து பருவ நிலைகளிலும், 24 மணி நேரமும் போட்டோக்கள் துல்லிமாக, பூமியை புகைப்படங்கள் எடுக்கும். இந்த செயற்கைக்கோள் பூமியில் உள்ள வளங்களை, நிலச்சரிவு பேரிடர் பாதிப்பு போன்றவைகளை கண்டுபிடிக்கும். 12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுவதுமாக புகைப்படம் எடுத்து குளோபல் கம்யூனிட்டி மூலம் இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் பயன்படும் செயற்கைக்கோள்.

இஸ்ரோ தமிழ்நாட்டுக்காக, கேரளாவுக்காக, வடமாநிலத்துக்காக என்று தனித்தனியாக ஆய்வுகளை நடத்தவில்லை. ஒட்டுமொத்தமாக, நமது நாட்டுக்காக ஆய்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய முக்கியமான 3 (அன்குரூட்) ஆள் இல்லாத விண்கலங்களை அனுப்ப வேண்டும். அதற்கான முதல் விண்கலம், இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பரில் அனுப்ப இருக்கிறோம். அதில் மனிதருக்கு பதிலாக, ரோபர்ட்டை வைத்து அனுப்ப இருக்கிறோம்.

இது வெற்றியடைந்தால் வருகிற 2026ம் ஆண்டு, மேலும் 2 ஆளில்லா விண்கலங்கள் அனுப்ப இருக்கிறோம். இந்த சோதனைகள் வெற்றி அடைந்தால், 2027ம் ஆண்டு மார்ச் மாதம், விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை, செயல்படுத்த இருக்கிறோம். பிரதமர் மோடி அதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறார். சந்திரயான் 4 திட்டமிட்டபடி நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. நிலாவில் இறங்கி ஆராய்ச்சிக்கான மாதிரிகள் எடுத்து வரும் பணிகளும் நடக்கிறது. சந்திரயான் 5, ஜப்பான் நாட்டுடன் இணைந்து, நாம் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்.

சந்திராயான் 5, வருகின்ற 2028ல் சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்படும். சந்திரயான் 3, 14 நாட்கள் சந்திரனில் ஆய்வில் இருந்தது. இனிமேல் அனுப்ப இருக்கும் சந்திரியான் 5, நூறு நாட்கள் சந்திரனில் ஆய்வுப் பணியில் இருக்கும். நாம் அனுப்பிய 55 செயற்கைக்கோள்கள், தற்போது விண்ணில் பயன்பாட்டில் உள்ளன. இந்த செயற்கைக்கோள்களை அடுத்த 4 ஆண்டுகளில், மூன்று மடங்கு அதிகரிக்கும் திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.