*விவசாயிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவமழை தொடர்கிறது. இதனால் ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பல மாதமாக மழை இல்லாததால், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
மே மாதத்தில் ஒரு சில வாரம் கோடை பருவமழை இருந்தாலும், அந்நேரத்தில் அணைகளுக்கு சொற்ப அளவில் தண்ணீர் வரத்து இருந்துள்ளது. பின்னர், மே மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது.
சில நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் துவக்கத்தில் இருந்து மீண்டும் பருவமழை பெய்ய துவங்கியது. இதனால், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் நீர்மட்டம் விரைந்து உயர்ந்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை இருப்பதால், பிஏபி திட்ட அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதில், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணை நீர் மட்டம், தற்போது 116 அடியாக உள்ளது. வினாடிக்கு சுமார் 800 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
அதுபோல, டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டம் 58.50 அடியாக உள்ளது. வினாடிக்கு 2600 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. தொடர்ந்து சில வாரமாக, ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொள்ளாச்சி மற்றும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், நீர் மட்டம் விரைந்து உயர்வதுடன், விரைவில் முழு அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளதால், தொடர்ந்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமவெளி பகுதியில் தொடரும் மழை
பொள்ளாச்சி மற்றும்ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய துவங்கியது. இந்த மழை தற்போதும் அடிக்கடி பெய்கிறது. சிலநேரத்தில் பகல் மற்றும் இரவு என அடுத்தடுத்து மழை உள்ளது. சமவெளி பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடர்கிறது. இதனால், காய்கறி மற்றும் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.