தென்காசி: அடிப்படை வசதி இல்லாத ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பணிகளை விரைவாக தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான அலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 43 ஆண்டுகள் பழமையான இப்பேருந்து நிலையம் பொலிவிழந்து இருந்து காணப்படுகிறது. கழிவறைகள் பராமரிப்பின்றி இருந்ததால் சில மாதங்களுக்கு முன்னரே இடித்து அகற்றப்பட்டது. மிகவும் குறுகலாக இடத்தில் உள்ள கழிவறையை மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
அதுவும் போதிய பராமரிப்பின்மை காரணமாக துர்நாற்றத்துடன் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட இங்கு இல்லை. பேருந்து நிலையத்தை நவீனமாக மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 கடைகளுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனினும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடி தீர்வாக குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்துவதுடன், புதிய கட்டுமான பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.