தஞ்சை: குருபகவான் ரிஷபராசியிலிருந்து இன்று மதியம் 1.19 மணிக்கு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்களில் இன்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு இன்று(11ம் தேதி) மதியம் 1.19 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இந்நிலையில் குரு பரிகார ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான குருபெயர்ச்சி விழா இன்று நடந்தது. குருபகவான் மதியம் 1.19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கோயிலில் உள்ள குருபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குரு பகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி ஆபசகாயேஸ்வரர் ஏலவார்க் குழலி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனி பகவான் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
லட்சார்ச்சனை;
குருப்பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை விழா வரும் 15ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சார்ச்சனை கட்டணம் ரூ.500. காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம். திட்டை வசிஸ்டேஸ்வரர் கோயில்: மற்றொரு குரு பரிகார தலமான தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் குருபகவான் அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் குருபெயர்ச்சியையொட்டி கடந்த 2ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.
இன்று குருபெயர்ச்சியையொட்டி மதியம் 1.19 மணிக்கு குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருப்பெயர்ச்சி முடிந்த பின்னர் வருகிற 23ம் தேதி லட்ச்சார்ச்சனையும், 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக் குமார், தக்கார் விக்னேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். குருபெயர்ச்சியையொட்டி ஆலங்குடி, திட்டை கோயில்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.