Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவை விமர்சித்து கருத்து பதிவிட பாஜவினருக்கு தடை: அண்ணாமலையின் வார் ரூமுக்கும் கிடுக்கிப்பிடி; நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை

சென்னை: அதிமுகவையும், எடப்பாடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட பாஜவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலையின் வார் ரூமுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி நடவடிக்கையால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக- பாஜ மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணிக்காக அதிமுக வைத்த நிபந்தனையின் பேரில் தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். பாஜ அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை அண்ணாமலை விரும்பவில்லை. இதை அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பலமுறை மறைமுகமாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில், நயினார் நாகேந்திரன் தலைவராக ஆன பிறகும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வார் ரூம்கள் மூலம் அதிமுகவை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 15 எக்ஸ் தள கணக்குகள் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பாஜவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிக்கக் கூடாது. கட்சியின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தமிழக பாஜ நிர்வாகிகள், தொண்டர்களின் சமூகவலைத்தள கணக்குகளை கண்காணிப்பதற்காக‌ Media Empower Network என்ற குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பாஜவினர் பங்கேற்கும் ஊடக விவாதம், சமூக வலைதள பதிவு, அவர்களின் பேச்சுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளது. பாஜவில் இருக்கும் எந்த தனி நபருக்கும் ஆதரவாக, மற்ற நிர்வாகிகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிளவுபடுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் 15 எக்ஸ் தள கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜவிலோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளிலோ தனிப்பட்ட தலைவர்களை ஊக்குவிக்கவோ அல்லது மற்றவர்களை இழிவுபடுத்தவோ கூடாது. அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளும் கட்சியின் கூட்டு விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் தனிப்பட்ட தலைவர்களை புகழும் வகையில் இருக்கக் கூடாது என்றும் பாஜ தலைமை உத்தரவிட்டதாக தெரிகிறது. நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி உத்தரவு அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தலைவராக இருக்கும்போது வார் ரூம் பாலிடிக்ஸ் என்ற புதிய அரசியலை முன்னெடுத்தார். பாஜவின் சமூக வலைத்தள குழுக்களான இந்த வார் ரூம்மில் அண்ணாமலைக்கு எதிரானவர்களை விமர்சிப்பவர்களை கட்சி நிர்வாகிகள் வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த வார் ரூம்கள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன், காயத்ரி ரகுராம், சிடி நிர்மல் குமார் மற்றும் சூர்யா சிவா ஆகியோர் வெளிப்படையாக விமர்சித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பாஜ தலைவராக ஆன பிறகும் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்குக்கு முடிவு கட்டவே நயினார் நாகேந்திரன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.