சென்னையிலிருந்து புதுடெல்லி பயணம் அதிமுக முதுகில் அமர்ந்து வளரத் துடிக்கும் பாஜ: தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய குடியரசு துணை தலைவர் திடீரென பதவி விலகியிருப்பதில் பெரும் அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றுள்ளனர் என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். அல்லது, இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். விசிக மீது எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதை வரவேற்கிறோம். எனினும், அவர் பாஜ வழிகாட்டுதலின்படி விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாஜவை விசிக கொள்கை பகையாகத்தான் முன்னிறுத்துகிறதே தவிர, அதிமுகவை அவ்வாறு முன்னிறுத்தவில்லை.
அந்தந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி, அவர்களின் முதுகில் சவாரி செய்தபடி பாஜ காலூன்றி வருகிறது. அதே உத்தியை தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கையாண்டு வருகிறது.
இங்கு அதிமுகவின் முதுகில் சவாரி செய்தபடி, தமிழகத்தில் பாரதிய ஜனதா வளரத் துடிக்கிறது. இதனால் அவர்கள் அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கின்றனர். ஏனெனில், திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதைவிட, அதிமுகவை பெரிதளவில் பலவீனப்படுத்தி, இங்கு பாஜ 2வது பெரிய கட்சியாக வந்துவிட வேண்டும் என்ற பதைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதைத்தான் நாங்கள் அதிமுகவினருக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
எங்களுக்கு அதிமுகமீது தோழமை உணர்வு இருக்கிறது. அது சிதைந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் சுட்டிக் காட்டி வருகிறோம். பாஜ-அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை முன்னுறுத்தி இயங்குவது அதிமுக இயக்கம். இதனால் சில கருத்துகளை, நாங்கள் நட்புணர்வோடு முன்வைக்கிறோம். ஏற்கெனவே தமிழக பாஜ தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை அப்புறப்படுத்தப்பட்டு விட்டார். எனினும், அதை அவர் மறந்துவிட்டு, ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று திருமாவளவன் எம்பி ஆவேசமாக தெரிவித்தார்.