டெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்கள் என்ன? என திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர் மிகுந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கேட்டுள்ளதாவது; இந்த விபத்தில் இறந்தவர்கள்/காயமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு? இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா? இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.