Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோழி வீட்டில் ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருடிய நடிகை கைது

திருமலை: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடித்த இளம்நடிகை தங்கம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத்பாபு (65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் தங்க நகைகள் திருட்டு போனதாக பிரசாத்பாபு விசாகப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு டிசிபி வெங்கடரத்தினம் தலைமையில் ஏடிசிபி கங்காதர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு சமீபத்தில் வந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில் 11 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 2 தனிப்படை அமைத்து 11பேரிடமும் விசாரணை நடத்தினர். இவர்களில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சினிமா நடிகையான சவுமியாஷெட்டி (21) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பிரசாத்பாபுவின் மகள் மவுனிகாவும், சவுமியாஷெட்டியும் தோழிகள். சவுமியா இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றார்.

இதன்மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஓரிரு சினிமா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது தோழியான மவுனிகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவர்களது வீட்டில் உள்ள குளியலறை, பெட்ரூம் உள்பட அனைத்து அறைகளுக்கும் சகஜமாக சென்று வருவாராம். அப்போது அவர்களது வீட்டில் அதிகளவு நகைகளை பீரோவில் வைத்திருப்பதும், அந்த சாவி வைக்கும் இடத்தையும் அறிந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 29, பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் மவுனிகா வீட்டிற்கு சென்ற சவுமியா படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகளை சிறிது சிறிதாக திருடிச்சென்றுள்ளார். அவ்வாறு சுமார் 1 கிலோ 750 கிராம் தங்க நகைகளை திருடியுள்ளார். இந்நிலையில்தான் எலமஞ்சிலியில் நடக்கும் உறவினர் திருமணத்திற்காக மவுனிகாவின் பெற்றோர் புறப்பட்டனர். இதற்காக பீரோவில் உள்ள நகைகளை அணிந்து செல்ல பார்த்தபோது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தனர். சவுமியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் கோவாவில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு சென்று நேற்று அவரை கைது செய்து விசாரித்தோம். அதில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரிடமிருந்து 74 கிராம் தங்க நகைகள் மட்டுமே போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் குறித்து கேட்டபோது, என்னை தொந்தரவு செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை சவுமியா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவுமியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் இளம் நடிகை சவுமியா சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.