வாலாஜா: பிரபல திரைப்பட நடிகர் யோகிபாபு. இவர் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டை கடந்து சென்றபோது காரின் டயர் பஞ்சரானது. இதனால் நிலை தடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது ஏறி நின்றது. இதில் நடிகர் யோகிபாபுவும் டிரைவரும் எவ்வித காயமின்றி தப்பியதாகவும் தகவல்கள் வெளியானது.
விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் யோகி பாபு அளித்துள்ள விளக்கம்:
எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமாக இருக்கிறேன். நான் நடித்த படத்தின் படப்பிடிப்புக்காக வந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால் நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


