ஆடிப்பெருக்கு விழா எதிரொலி.. அதிகாலை முதலே களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச்சந்தை: 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.30,000 விற்பனை!!
சிவகங்கை: நாளை நடு ஆடி கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் அன்றைய தினம் அசைவம் சமைப்பது வழக்கம். இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கால்நடை வாரச்சந்தை அதிகாலையிலேயே களைகட்டியது. அதிகாலை 5 முதல் 8 மணி வரை கால்நடை சந்தையும், அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். கேரளா, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடு, கோழி, மாடு வாங்க குவிந்தனர்.
இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த விவசாயிகள் ஆடு, கோழி, மாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்ததால் சந்தை களைகட்டியது. சுமார் 2000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. ஆடுகளை ஏற்றி செல்வதற்காக நெடுஞ்சாலையின் இருபுறமும் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. 35 கிலோ எடை கொண்ட நாட்டு ஆடு ரூ.30 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கோழியின் விலை ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. வான்கோழிகள் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடிப்பெருக்கு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அசைவ விருந்துகள் வீடுகளில் சமைப்பது வழக்கம். இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் ஆடுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். சேலம், கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். கடந்த வரத்தைவிட ஆடுகளின் விலை அதிகரித்து இருந்தது. சுமார் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.