Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

5 லட்சம் பக்தர்கள் வரை வருகை தர உள்ளதால் ஆடி கிருத்திகையில் திருத்தணி கோயிலில் அன்னதானம் வழங்க கடும் கட்டுப்பாடு: முன்பதிவு அவசியம்

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முன்பதிவு அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கோயிலில் அன்னதானம் வழங்குவது குறித்து கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆடி கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் வரும் 13ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் தங்களை சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வரும் 15ம் தேதிக்கு பின்னர், விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதி பெறப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் வழங்கவும், சமைக்கவோ அனுமதிக்க கூடாது. உணவு பொருட்கள் கலப்படமில்லாமல் தரமானதாகவும், தூய்மையாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கிட இயலாது. மேலும், போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு இணை ஆணையர், செயல் அலுவலர், தலைமை அலுவலகம், அரக்கோணம் சாலை திருத்தணி என்கிற விலாசத்திலும் 849279217 மற்றும் 957872 6302 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது. உணவு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து, அதில் உணவு கழிவுகளை சேகரித்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை அகற்றுவதுடன், அன்னதானம் வழங்கிய இடத்தை சுத்தம் செய்துவிட்டுச் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.