தூத்துக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுத்து புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராமேஸ்வரத்தில் அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பல்வேறு மாவட்டங்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுத்து வழிபட்டனர். மேலும் காவேரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் படித்துறையில் உள்ளுர் மீனவர்களோடு, தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவேரி ஆற்றில் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவேரியில் புனித நீராடினர்.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏராளமான மக்கள் தவித்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.