பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால், ஆழியார், பரம்பிக்குளம் அணைகளில் தொடர்ந்து நீர் நிரம்பி உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பல நாட்கள் பெய்தது. இதனால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார் மற்றும் ஆழியார், அணைகள் அடுத்தடுத்து விரைந்து முழு அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைந்து உள்ளது. இருந்தாலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதில், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 118.40 அடியாக உள்ளது.
அப்பர் ஆழியார் அணையிலிருந்தும் தண்ணீர் திறப்பால், ஆழியார் அணைக்கு வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், டாப்சிலிப்பை அடுத்து மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து முழு நீர்மட்டத்தை எட்டியவாறு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.