Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திரா, தெலங்கானா உட்பட 7 மாநிலங்களுக்கு 8 புதிய ரயில்வே திட்டம்: 64 புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கம்

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா உட்பட 7 மாநிலங்களுக்கு 8 புதிய ரயில்வே திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 64 புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் அளித்த பேட்டியில், ‘ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் 2031ம் நிதியாண்டு வரையிலான இந்தப் பணிகளுக்கு, 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க்கை 900 கிமீ அதிகரிக்கும். மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோலில் இருந்து தெலங்கானாவில் வாரங்கல் வரை முழுமையான பாதை உருவாகும். விவசாய பொருட்கள், உரம், நிலக்கரி, இரும்பு தாது, எஃகு, சிமென்ட், பாக்சைட், சுண்ணாம்பு, அலுமினிய தூள், கிரானைட், பேலஸ்ட், கொள்கலன்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.

இந்தத் திட்டங்களின் மூலம் 64 புதிய நிலையங்கள் கட்டப்படும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள், இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்படும் வீடுகளால் 1 கோடி தனிநபர்கள் பயனடைவார்கள். சமவெளிப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 1.2 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ரூ.1.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும்’ என்றார்.