8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை சுனாமி தாக்கியது: 13 அடி உயரம் வரையிலும் எழுந்த கடல் அலைகள்; பசிபிக் பெருங்கடல் நாடுகளில் அபாய எச்சரிக்கை
டோக்கியோ: ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி அலைகள் தாக்கின. அதிகபட்சமாக 13 அடி வரையிலும் அலைகள் எழுந்தன. பசிபிக் நாடுகளில் சுனாமி அபாய எச்சரிக்கையை தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை, பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து சுமார் 119 கிமீ தொலைவில் கடலில் 20.7 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2011க்குப் பிறகு உலகளவில் ஏற்பட்ட மிக பயங்கரமான நிலநடுக்கம் இது. இந்த நிலநடுக்கத்தை தொடந்து பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் 10 முதல் 13 அடி வரையிலும் ராட்சத சுனாமி அலைகள் எழுந்ததாக அந்நாட்டின் பிராந்திய அவசரகாலத்திற்கான அமைச்சர் செர்ஜி லெபிதேவ் தெரிவித்துள்ளார்.
குரில் தீவில் அமைந்துள்ள செவெரோகுரில்ஸ்க் நகரில் மீன்பிடி துறைமுகம் சுனாமி அலைகளால் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகவும் நகர மேயர் அலெக்சாண்டர் ஓவ்சியானிகோவ் தெரிவித்துள்ளார். சுனாமி அலைகளால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடலோர பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதே போல, ஜப்பானில் காலை 8.25 மணிக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள ஹமனகா நகரம் மற்றும் இவாட்டில் உள்ள குஜி துறைமுகத்தில் 2 அடி உயர சுனாமி அலைகள் பதிவாகியதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்திற்கு 5 மணி நேரத்திற்குப் பிறகு டோக்கியோ விரிகுடாவில் 20 சென்டிமீட்டர் உட்பட பல பகுதிகளில் சிறிய அலைகள் பதிவாகி உள்ளன. இதனால், கடலை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் உயரமான நிலப்பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்தனர். அங்குள்ள அணுமின் நிலையங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 2011ல் ஜப்பானில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சேதமடைந்த புகுஷிமா டாய்ச்சி மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்து 4,000 தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஜப்பானுக்கும் அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் இடையில் உள்ள மிட்வே அட்டோலின் தீவுகளில் 6 அடி வரையிலும் அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் கூறினார். அவர் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து கடலோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். இதன் காரணமாக ஹவாய் தீவின் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் சுமார் 2 அடி உயர சுனாமி அலைகள் எழுந்தன. சுனாமியின் தாக்கம் சில மணி நேரத்தில் இருந்து ஒருநாள் வரையிலும் நீடிக்கும் என்பதால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், அமெரிக்காவின் வாஷிங்டன், கலிபோர்னியாவை உள்ளடக்கிய மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மெக்சிகோ, குவாம், சிலி, கோஸ்டாரிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இந்த எச்சரிக்கை படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தாலும் சுனாமி அலைகளாலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ரஷ்யாவில் பலர் காயமடைந்திருப்பதாக மட்டுமே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கிய பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதுவரை எந்த உயிர் பலியும் இல்லை என்றாலும், சுனாமி அலைகள் பசிபிக் நாடுகளின் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
* ஒருநாள் கழித்தும் சுனாமி தாக்கலாம்
அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் சுனாமி எச்சரிக்கை ஒருங்கிணைப்பாளர் டேவ் ஸ்னைடர் கூறுகையில், ‘‘சுனாமி என்பது ஒரு அலை மட்டுமல்ல. இது நீண்ட காலத்திற்கு சக்திவாய்ந்த அலைகளின் தொடர். சுனாமிகள் போர் விமானத்தைப் போல மணிக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் ஆழமான நீரில் கடலை கடக்கின்றன. அவை கரையை நெருங்கும்போது, வேகத்தைக் குறைத்து குவியத் தொடங்குகின்றன. அதனால் தான் அலைகள் பல அடி உயரத்திற்கு எழத் தொடங்குகின்றன. பொதுவாக சுனாமியின் தாக்கம் சில மணி நேரம் நடக்கலாம் அல்லது ஒருநாள் கழித்தும் தாக்கலாம்’’ என்றார்.
* இந்தியாவை சுனாமி தாக்குமா?
ரஷ்யாவின் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எந்த சுனாமி அபாயமும் இல்லை என இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2004ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமியில் இந்தியா உட்பட 11 நாடுகளில் சுமார் 2.20 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
* உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
தேதி நாடு ரிக்டர் அளவு
1960
மே 22 சிலி, வல்டிவியா 9.5
1964
மார்ச் 27 அமெரிக்க அலாஸ்கா 9.2
2004
டிச.26 இந்தோனேசியா சுமத்ரா 9.1-9.3
2011
மார்ச் 11 ஜப்பான் டோஹோகு 9.1
1952
நவ.4 ரஷ்யா கம்சாட்கா தீபகற்பம் 9
2025
ஜூலை 29 ரஷ்யா கம்சாட்கா தீபகற்பம் 8.8
2010
பிப். 27 சிலி மவ்லி 8.8
1906
ஜன. 31 ஈகுவடார்- கொலம்பியா கடல் 8.8
1965
பிப். 4 அமெரிக்கா அலாஸ்கா 8.7
1950
ஆக. 15 இந்தியா அருணாச்சல் 8