பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் 22 பேர் இன்று காலை சரக்கு வேனில் கூலி வேலைக்காக காட்டம்பட்டிக்கு புறப்பட்டனர். வால்பாறையில் இருந்து ஆழியார் வரும் மலைபாதையில் வேன் வந்து கொண்டிருந்தது. சின்னார்பதி என்ற பகுதியில் வளைவில் திரும்பும்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்த திலகராஜ் (40), ராணி (55) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
தகவலறிந்த அழியார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் (32), தேவகுமார் (25), சந்தோஷ் (18), மதீஷ் (23), மாரிமுத்து (19), வெண்ணிலா (21), காளியம்மாள் (30), தேவபாலா (23), ராசாத்தி (28), காளிமுத்து (17), கன்னியப்பன் (30), சதீஷ் (30), சாந்தி (52), கமலா (65), லாரன்ஸ் (42), சஞ்சய் (20), தண்டபானி (67), மணி (40), மாங்காரு (40) ஆகிய 20 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 பேரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.