Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹத்ராசில் 121 பேர் பலியான விவகாரம்; 119 பேரிடம் வாக்குமூலம் பதிவு: 300 பக்க அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

லக்னோ: ஹத்ராசில் 121 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 119 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்த எஸ்ஐடி, தனது 300 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. கடந்த 2ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் சூரஜ்பால் என்ற போலே பாபா சாமியார் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மக்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவ் பிரகாஷ் மதுகர் உட்பட 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் சாமியாரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. 17 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க எஸ்ஐடி பிரிவு ஆக்ரா ஏடிஜிபி அனுபம் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு தனது 300 பக்க அறிக்கையில் 119 பேரிடம் வாக்குமூலங்களை பெற்று பதிவு செய்துள்ளது. கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஹத்ராஸ் கலெக்டர் ஆஷிஷ் குமார், எஸ்பி நிபுன் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளின் வாக்குமூலமும் இதில் அடங்கும். இதுதவிர, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்டிஐ தனது அறிக்கையை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்திடம் அளித்துள்ளதாகவும், ஹத்ராஸ் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்தும், அலட்சியங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.