குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.1,188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை
அகமதாபாத்: குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. குஜராத் மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரான உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் மூத்த நீதிபதி ஏ.ஒய். கோக்ஜே ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மாநிலத்தின் அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் மையங்களும் லோக் அதாலத்தை நடத்தின.
இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, சிவில் வழக்குகள், திருமண மற்றும் தொழில் தகராறுகள் என மொத்தம் நிலுவையில் இருந்த 18,34,231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் ஒரே நாளில் மொத்தம் 11,69,083 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. குஜராத் லோக் அதாலத் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மொத்தமாக ரூ.1,188.92 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த லோக் அதாலத்தின் முக்கிய சிறப்பம்சமாக, வழக்கு பதிவாவதற்கு முந்தைய நிலையிலேயே சமரசம் பேசும் ‘மாற்றுத் தீர்வு முறை’ மூலம் 7,49,486 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.112.37 கோடிக்கு சமரசம் எட்டப்பட்டது.
இது தவிர, 6,88,276 போக்குவரத்து மின்னணு அபராத வழக்குகள் மூலம் ரூ.35.74 கோடி வசூலிக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பிரிந்து வாழ்ந்த 3,093 தம்பதியரின் திருமண வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 844 பழைய வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டதும் இந்த லோக் அதாலத்தின் மற்றுமொரு சாதனையாகும்.