கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கொட்டபுத்தூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சன் (50), விவசாயி. இவருக்கு விஜய் (29), பிரகாஷ் (26) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேலை நிமித்தமாக பிச்சனும், அவரது மகன்களும் காட்டு குடியிருப்பில் உள்ள வீட்டிற்கும், கொட்டபுத்தூரில் உள்ள வீட்டிற்கும் அவ்வப்போது சென்று வருவது வழக்கம். இதனிடையே பிச்சன் குடும்பத்துக்கும், அவரது பக்கத்து நில உரிமையாளரான நடுமதூர், மேல்தெரு, ஏரிகாடு பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த 5 வருடமாக நில பிரச்னை தொடர்பாக தகராறு இருந்தது.
இந்நிலையில் ஆண்டியின் மகன்களான தங்கராசு (43), செல்வம் (42), அண்ணாமலை (50), இளையராஜா (35) ஆகியோர் பிச்சனின் மகன்களை கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து வந்தார்களாம். இந்நிலையில் கடந்த 25ம்தேதி வீட்டிலிருந்து காட்டு கொட்டகை பகுதிக்கு விஜய் சென்றிருந்தார். அங்கு பிரகாஷ் பின்மண்டையில் ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரகாஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின்படி கரியாலூர் போலீசார், விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் பிரகாஷ் தலையில் குண்டு பாய்ந்து இறந்திருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் தங்கராசுவை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் கோழி மற்றும் அணிலை சுட்டதாக முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த தங்கராசு, பின்னர் துப்பாக்கியால் சுட்டதில்தான் பிரகாஷ் இறந்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தின்போது தங்கராசின் சகோதரர்களான செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகியோரும் உடனிருந்தது தெரியவரவே, 4 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.