பணத்துக்கு பஞ்சமே இல்லை எனது மூளையைப் பயன்படுத்தி மாதம் ரூ.200 கோடி சம்பாதிப்பேன்: கட்கரி பரபரப்பு பேச்சு
நாக்பூர்: எனது மூளையைப் பயன்படுத்தி மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க முடியும் என, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ஒன்றிய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தியது. புதிதாக தயாரிக்கப்படும் வாகன இன்ஜின்கள் இதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முடிவால், கட்கரியின் மகன்கள் நடத்தும் முன்னணி எத்தனால் நிறுவனங்கள் பலனடைவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக இன்ஜின் பழுதாவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘மாதம் ரூ.200 சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்கு பணத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லை. அதற்காக அலையவும் இல்லை. சம்பாதிக்க எனது மகன்களுக்கு யோசனை கூறி வருகிறேன். எனது மகன் சமீபத்தில் ஈரானில் இருந்து 800 கன்டெய்னர் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளார். இந்தியாவில் இருந்து ஈரானுக்கு 1,000 கன்டெய்னர் வாழைப்பழம் ஏற்றுமதி செய்துள்ளார். இதற்காக ஈரானுடன் எந்த உடன்படிக்கையும் கிடையாது. எனக்கு சொந்தமாக சர்க்கரை ஆலை, சாராய ஆலை, மின் உற்பத்தி ஆலைகள் உள்ளன என்றார்.