Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும்

*குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விருத்தாசலம் : 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் யூரியா தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. உரக்கடைகளுக்கு சென்று யூரியா கேட்டால் ரூபாய் 10 ஆயிரத்திற்கு வேளாண் இடுப்பொருட்கள் வாங்கினால் தான் ஒரு மூட்டை யூரியா தருவேன் என்கிறார்கள். யூரியாவை பதுக்கி வைத்து லாபம் ஈட்டுகிறார்கள். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டம் நடைபெறுவதால் விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்கள் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து விவசாய நகை கடன் வாங்க சென்றால் நகை வைப்பவர்கள் கைரேகை வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவ்வாறு கைரேகை வைத்தால் கைரேகை சரியாக பதிவாகவில்லை எனக் கூறியும், சர்வர் பிரச்னையாக உள்ளது என கூறியும் ஒரு நாள் முழுவதும் காக்க வைக்கின்றனர். இதனால் ஒரு நாள் முழுவதும் வங்கியிலேயே காத்திருக்க வேண்டி இருப்பதால் விவசாய வேலைகளை செய்ய முடியவில்லை.

இந்த முறையை ரத்து செய்து வழக்கமான முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் பகுதியில் உள்ள நீர் ஆதாரமான மேமாத்தூர் அணைக்கட்டு, பெலாந்துறை அணைக்கட்டு, விருத்தாசலம் அணைக்கட்டு, வெலிங்டன் ஏரி ஆகியவை மூலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 62 ஏரிகளில் பாசனத்திற்கு தண்ணீர் நிரம்புவதால் 46 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார பல கோடி நிதி ஒதுக்கியும், சரிவர தூர்வாராத காரணத்தால் தற்போது ஏரி பாசனமே நடைபெறவில்லை.

இதனால் விருத்தாசலம் கோட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 116 ஆழ்துளை மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் இரைப்பதால் மண் மலடாகி வருகிறது. இந்த மின் மோட்டார்கள் ஓட மின்சாரம் தயாரிக்க இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகின்ற டிசம்பர் மாதம் பெரிய போராட்டம் நடத்தப்படும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து அனைத்து கோரிக்கைகளும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணி ராஜ் தெரிவித்தார்.

இதில் வேளாண்மை துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலியபெருமாள், குப்புசாமி, கந்தசாமி, தங்க தனவேல், சக்திவேல், சுரேஷ், பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.