மும்பை: குறுகியகாலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை எடுக்கிறது. பண வீக்கம் குறைந்ததால், கடந்த ஜூன் மாதத்தில் ரெப்போ வட்டி அரை சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு மாதத்துக்கான கூட்டம் நேற்று முடிந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் ரெப்போ வட்டி மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது.
நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முடிவுகளை எடுக்கும். தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நிலையுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது. நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 3.1 சதவீதமாக இருக்கும். இருப்பினும் 4ம் காலாண்டில் 4 சதவீதத்துக்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. நிகர வராக்கடன்கள் விகிதம் 0.5 முதல் 0.6 சதவீதத்துக்குள் உள்ளது. ரெப்போ வட்டி அடிப்படையில் தான் வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே, கடன் வட்டி , இஎம்ஐகளில் மாற்றம் எதுவும் இருக்காது என்றார்.
* வாரிசுதாரர்கள் செட்டில்மென்ட் பெற எளிய நடைமுறைகள்
வங்கிக் கணக்கு வைத்திருப்போர், லாக்கர் வசதி பயன்படுத்துவோர் இறந்து விட்டால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் எளிமையாக செட்டில்மென்ட் பெறும் வகையில் நிலையான நடைமுறைகள் வகுக்கப்படும். இது தொடர்பான வரைவு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மல்ஹோத்ரா கூறினார். தற்போது, இறந்தவரின் வாரிசுதாரர் அல்லது நியமனதார் வங்கிக் கணக்கில் உள்ள தொகை மற்றும் லாக்கரில் உள்ள பொருட்களை பெற வங்கிகள் பிரத்யேக ஆவண நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன. வங்கிக்கு வங்கி சற்று வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.