Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் பயங்கரம்; வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு: தீவிரவாத செயலா? விசாரணை

* 2 பாதுகாவலர்கள் படுகாயம்: ஆப்கனை சேர்ந்தவர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எப்போதுமே உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம் இருப்பதால் 24 மணி நேரமும் பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடினால் அவ்வளவுதான்... அடுத்த கணமே பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைத்து விடுவார்கள். அந்தளவுக்கு உயர்மட்ட பாதுகாப்பு நிறைந்த இடம் என்று சொல்லலாம்.

இந்நிலையில்தான் வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் நேற்றிரவு திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மற்ற பாதுகாவலர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் அந்த நபரும் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் படுகாயமடைந்த பாதுகாவலர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் 2021ம் ஆண்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்றும், அவரது சட்டப்பூர்வ அந்தஸ்து கடந்த மாதமே காலாவதியாகி விட்டது எனவும் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை மற்றும் கருவூலத் துறை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றபோது அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் இல்லை. டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது ரிசார்ட்டிலும், ஜேடி வான்ஸ் கெண்டக்கி மாகாணத்திலும் இருந்தனர். பயங்கரவாத நோக்கத்துடன் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: டிரம்ப்

அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நமது மாபெரும் தேசிய காவல் படையையும், நமது ராணுவ மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கடவுள் ஆசீர்வதிப்பார். இவர்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர்கள். அமெரிக்காவின் அதிபராக நானும், உங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்பேன்.