ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா இணை அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. கஜகஸ்தான் நட்டின் ஷிம்கென்ட் நகரில், 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணியாக, தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், இந்திய வீரர் அர்ஜுன் பாபுடா இணை பங்கேற்றது.
இப்போட்டியில் சீனாவின் டிங்கே லு - ஜிங்லு பெங் இணையுடன் நடந்த மோதலில் 17-11 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக ஆடிய இந்திய இணை வெற்றி பெற்றது. அதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற இளவேனில் - அர்ஜுன் இணை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் தனிநபர் பிரிவிலும் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் பாபுடா, ருத்ரான்க்ஷ் பாட்டீல், கிரண் ஜாதவ் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது.