சென்னை: பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து வருபவர், ஜோஜு ஜார்ஜ் (47). தற்போது அவர் ஷாஜி கைலாஷ் இயக்கும் ‘வரவு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். மூணாறு பகுதியில் நடந்த படப்பிடிப்பில் ஜோஜு ஜார்ஜ், தீபக் பரம்போல் உள்பட 6 பேர் ஜீப்பில் செல்லும் காட்சி படமானபோது, திடீரென்று ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஜோஜு ஜார்ஜுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இன்னும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், ஜீப்பை ஓட்டிக்கொண்டு சென்றது ஜோஜு ஜார்ஜ் என்பது தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ‘தக் லைஃப்’ படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில், ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.