கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கப் பதக்கம் வென்றார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய இளம் வீரர் சம்ரத் ராணா ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த 20 வயது வீரரான சாம்ராட் ராணா, இறுதிச்சுற்றில் தனது துல்லியமான இலக்குத் திறனால் ஆதிக்கம் செலுத்தினார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா (586.27 புள்ளி), வருண் தோமர் (586.26) ஆகியோர் முதல் இரண்டு இடங்கள் பிடித்து இறுதி பெட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப்போட்டியில் சம்ரத் ராணா மொத்தம் 243.7 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். இவரை விட வெறும் 0.4 புள்ளிகள் பின்தங்கி, சீனாவின் ஹூ கை 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.
தனிநபர் ஏர் பிஸ்டலில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய பிஸ்டல் வீரர் என்ற பெருமையையும் சம்ரத் ராணா பெற்றுள்ளார். சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்கும் முதல் போட்டியிலேயே இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே பிரிவில் இரண்டு இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த வெற்றியின் மூலம், இந்தியா தனது பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
