Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த சூட்டிங்மட்டம் 50 நாட்களுக்கு பின் திறப்பு

*சாரல் மழையில் நனைந்த படியே பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த ஊட்டி சூட்டிங்மட்டம் நேற்று திறக்கப்பட்டது. பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையில் நனைந்தவாறும், குடைபிடித்த வாறும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் குளுகுளு காலநிலை நிலவும் மலைவாச தலமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

தொட்டபெட்டா சிகரம், பைக்காரா, தெப்பக்காடு, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பிரசித்தி பெற்றது. நகருக்கு வெளியில் அமைந்துள்ள இச்சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஊட்டி நகரில் சுமார் 15 கிமீ தொலைவில் ஷூட்டிங் மட்டம் பகுதி அமைந்துள்ளது. பசுமையான மலைகளுக்கு மத்தியில் ஒரு அழகிய புல்வெளிப் பகுதியாகும். முன்னர் வென்லாக் டவுன்ஸ் என்று அழைக்கப்பட்ட மூடுபனி மூடிய அலை அலையான பச்சை புல்வெளிகள் சூழ்ந்த மலைப்பகுதி ஆகும்.

மலைச்சரிவுகள் மற்றும் செழிப்பான வனப்பகுதிகளை தொகுப்பை உள்ளடக்கிய இந்த கண்கவர் புல்வெளியில் தமிழ் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்கள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளிகளை காண ஏரளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இப்பகுதி பகல்கோடு மந்து சூழல்மேம்பாட்டு குழு முலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் புல்வெளிகளில் நடந்து மலையேறிய நிலையில், புற்கள் சேதமடைந்து மண் தரைகளாக காட்சியளித்தன. இதனால் இந்த சூழலில் கடந்த மாத துவக்கத்தில் கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அப்போது பாதுகாப்பு கருதி சூட்டிங்மட்டம் பகுதி மூடப்பட்டது.

தொடர்ந்து சூட்டிங்மட்டம் பகுதியில் சேதமடைந்த புல்வெளிகளை சீரமைக்கும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு அங்கு புதிய புற்கள் பதிக்கப்பட்டன. நுழைவுவாயில் பகுதியில் டிக்கெட் கவுண்டர் அருகே கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டது.

பெரும்பாலான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்பட்டது. தற்போது ஊட்டியில் காற்றுடன் தொடர் சாரல்மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறும், குடைகளை பிடித்தவாறு சூட்டிங்மட்டம் புல்வெளிகளில் நடந்து சென்று இயற்கை சூழலை பார்த்து ரசித்தனர்.