சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து பரவத்தூர் வழியாக சோளிங்கருக்கு தினமும் தடம் எண் 45 - டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சோளிங்கர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். பஸ்சில் சில மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடியும், ஜன்னலை பிடித்து தொங்கியபடியும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்களை கண்டக்டர், டிரைவர் அறிவுறுத்தினாலும் கண்டுகொள்வதில்லையாம். இதேபோல் வழக்கம்போல் நேற்று அரக்கோணத்தில் இருந்து பரவத்தூர் வழியாக சோளிங்கர் நோக்கி டவுன் பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான மாணவ, மாணவிகள் இருந்தனர்.
படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடிய ஜன்னலில் தொங்கியபடி வந்தனர். சுமார் 8.40 மணிக்கு சோளிங்கர் அடுத்த அய்யனேரி பகுதியில் வந்தபோது, சாலையோரம் நடந்துசென்ற முதியவரை படிகளில் தொங்கியபடி சென்ற ஒரு மாணவன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி முதியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தினர். பின்னர் முதியவரை மீட்டு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பஸ் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் வந்தவர்கள் அங்கிருந்து 3 கி.மீ. தூரம் உள்ள சோளிங்கருக்கு நடந்து வந்தனர். இதுகுறித்து ஆர்கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.