பல ஆண்டுகளுக்கு பின் கருத்தரித்த நிலையில் கருவில் இருந்த இரட்டை குழந்தைகள் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் சாவு: கணவரும் தூக்குபோட்டு தற்கொலை
திருமலை: திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு உருவான இரட்டை குழந்தைகள் கருவிலேயே இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் இறந்தார். இதனால் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் (40). ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷ்ரவ்யா (35). இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். அப்போது ஐவிஎப் மூலம் ஷ்ரவ்யா கர்ப்பம் அடைந்தார்.
ஸ்கேன் பரிசோதனையில் கருவில் இரட்டை குழந்தைகள் உருவாகியுள்ளது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாத நிலையில் இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதை நினைத்து இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஷ்ரவ்யாவிற்கு 8 மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய், அவரை அட்டாபூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் கருவில் இருந்த 2 குழந்தைகளும் இறந்தது ெதரிய வந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் அகற்றப்பட்டது.
சுயநினைவு திரும்பிய பின்னர் கருவில் இருந்த குழந்தைகள் இறந்ததை அறிந்த ஷ்ரவ்யா கடும் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக குட்மல்காபூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்ைச பலனின்றி ஷ்ரவ்யா பரிதாபமாக இறந்தார். கருவில் இருந்த இரட்டை குழந்தை மற்றும் மனைவி இறந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த விஜய், தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து நேற்று தகவலறிந்த ஷம்ஷாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவில் இருந்த இரட்டை குழந்தை இறந்த அதிர்ச்சியில் மனைவியும், அவரது கணவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


