Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கப்பல் மீது ஹவுதி படைகள் 13 முறை ஏவுகணை தாக்குதல்: 26 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் தப்பிய குமரி சிஐஎஸ்எப் வீரர்

* விடியவிடிய நடந்த திக்... திக்... நிமிடங்கள் குறித்து பரபரப்பு பேட்டி: 4 பேர் பலி, 11 பேர் மாயம், 10 பேர் மீட்பு

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் மணவிளையை சேர்ந்தவர் அகஸ்டின் (56). விருப்ப ஓய்வு பெற்ற மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர். இவரது மனைவி ஷீஜா கேரளாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். மகன் தபால் துறையில் வேலை பார்த்து வருகிறார். மகள் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். காஸ்மோ கம்பெனியில் மெர்ச்சென்ட் நேவி பிரிவில் அகஸ்டின் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.

இவர் வேலை பார்த்த என்டர்னிட்டி சீ என்ற கப்பல் செங்கடல் வழியாக கடந்த 7ம் தேதி சென்ற போது இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக ஹவுதி படைகள் கப்பலை தாக்கினர். இதில் கப்பலில் இருந்த 4 பேர் இறந்தனர். கேரளாவை சேர்ந்த ஒருவர் உட்பட கடலில் 11 பேர் மாயமாகி உள்ளனர். 26 மணி நேரம் கடலில் தத்தளித்த நிலையில் அகஸ்டின் உட்பட 10 பேர் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தப்பிய அகஸ்டின் கடலில் 26 மணி நேரம் நீந்தி உயிர் தப்பி உள்ளானர்.

கடந்த 16ம் தேதி ஊருக்கு வந்த அகஸ்டின் உயிர் தப்பியது குறித்து கூறியதாவது: அமெரிக்காவிலிருந்து சோமாலியாவிற்கு கேழ்வரகு கொண்டு சென்ற, கிரீஸ் நாட்டை சேர்ந்த சீ கார்டியன் கம்பெனிக்கு சொந்தமான என்டர்னிட்டி சீ என்ற கப்பலில், செங்கடல் பகுதியில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி செக்யூரிட்டியாக சென்றேன். சோமாலியா நாட்டில் கேழ்வரகை இறக்கி விட்டு கடந்த 7ம் தேதி திரும்ப செங்கடல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.

கப்பலில் 3 செக்யூரிட்டிகள், கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்கள் என 25 பேர் இருந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த 2 பேர், 21 பிலிப்பைன்ஸ், கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவர், ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் இருந்தனர். கப்பல் செங்கடலில் வடக்கில் சென்று கொண்டிருந்த போது, இரவு 7 மணியளவில் கப்பலில் அதிர்வு ஏற்பட்டது. உடனே நான் கப்பலின் மேல் தளத்தில் சென்று பார்த்த போது, மீண்டும் கப்பலில் அதிர்வு ஏற்பட்டது.

உடனே உள்ளே சென்று பார்த்த போது கப்பல் மீது ஏவுகணை தாக்குதலில் ஒரு பகுதி உருக்குலைந்து காணப்பட்டது. தொடர்ந்து 10 முறை ஏவுகணை தாக்குதல் நடந்தது. கப்பலில் இருக்கைகள் நொறுங்கி போனது. கேப்டன் அறைக்கு சென்று பார்த்த போது, கேப்டன் உட்பட 4 பேர் இறந்து கிடந்தனர். ஒருவர் கால் துண்டாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் 8ம் தேதி காலை மீண்டும் 3 முறை ஏவுகணை தாக்குதல் நடந்தது.

உதவி கோரி தகவல் அனுப்பினோம். யாரும் வரவில்லை. இதையடுத்து உயிருடன் இருந்த நாங்கள் 21 பேரும் ரிக்கவரி படகில் வெளியே போகலாம் என்று நினைத்த போது, ஏவுகணை தாக்குதலில் கப்பலின் உள்பகுதி சேதமாகி இருந்தது. ரிக்கவரி படகையும், எமெர்ஜென்சி ஷீட்டையும் (கோட்) வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் லைப் ஜாக்கெட் மாட்டிக் கொண்டு காலை 10 மணிக்கு 21 பேரும் கடலில் குதித்தோம்.

நாங்கள் கடலில் நீந்தி கொண்டிருந்த போது ஒரு படகில் துப்பாக்கி ஏந்திய நிலையில் 5 பேர் அருகே வந்து பார்த்துவிட்டு திரும்ப சென்றனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. கடலில் இறங்கிய போது என்னுடன் கேரள மாநிலம் காயங்குளத்தை சேர்ந்த அனில் என்பவரும் இருந்தார். அலை தாக்கம் காரணமாக தனி தனி குழுவாக பிரிந்தோம். சுமார் 26 மணி நேரம் தண்ணீரில் நீந்தி கொண்டே இருந்தோம். 9ம் தேதி காஸ்மோ கம்பெனியின் ரெக்கவரி படகு வந்து 10 பேரை மீட்டது. 12ம் தேதி மாலை வரை தேடியும் மீதி 11 பேரை மீட்க முடியவில்லை.

அதில் கேரளாவை சேர்ந்த அனிலும் உண்டு. மீட்கப்பட்ட எங்களை 14ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெய்சன் துறைமுகத்தில் கொண்டு விட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் கடந்த 15ம் தேதி டெல்லி வந்தேன். அன்று இரவே திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து 16ம் தேதி ஊருக்கு வந்தேன். அமெரிக்காவில் இருந்து சோமாலியா சென்று வந்த கப்பல் என்பதால் ஹவுதி படைகள் தான் ஏவுகணை மூலம் தாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.