டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை நாடு கடத்த கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை ஒன்றிய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறி கடந்தாண்டு ஆகஸ்டில் தீவிரமடைந்தது. இதனால், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர், வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த மாணவர் போராட்டங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.அறிக்கை தெரிவிக்கின்றன. இந்த கலவரங்களை ஒடுக்க கடுமையான முறைகள் பயன்படுத்தப்பட்டதாக ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அஸாதுஸ்ஸமான் கான் கமல், முன்னாள் காவல்துறை அதிகாரி செளத்ரி அப்துல்லா அல் மாமூன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 17ம் தேதி டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து, ஷேக் ஹசீனா, அஸாதுஸ்ஸமான் கான் கமல் ஆகியோருக்கு மரண தண்டனையும், சௌத்ரி அப்துல்லா அல் மாமூனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், ‘இந்த கோரிக்கை இப்போது இந்தியாவின் நீதித்துறை மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளின்படி ஆராயப்பட்டு வருகிறது. வங்கதேச மக்களின் அமைதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறோம். இதுகுறித்து அனைத்து தரப்பினருடனும் ஆக்கபூர்வமாக செயல்பட தயாராக இருக்கிறோம்’ என்றார்.
இதுகுறித்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் எம்.தௌஹித் ஹூசைன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது உண்மைதான். தற்போது நிலைமை வேறு. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, ஷேக் ஹசீனா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின்படி, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம் இந்திய அரசிடம் இந்த கோரிக்கை முறைப்படி சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா நிச்சயம் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

