புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் சசி தரூர் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பியான சசி தரூர், கடந்த சில மாதங்களாகக் கட்சித் தலைமையுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் உடல்நலக் குறைவு எனக் கூறி அவர் பங்கேற்கவில்லை. ஆனால், அதற்கு முந்தைய நாள் பிரதமர் மோடி நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வப்போது பிரதமரைப் பாராட்டிப் பேசிவரும் அவர், தற்போது மீண்டும் கட்சியின் முக்கியக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் வியூகக் குழு கூட்டத்திலும் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவரது அலுவலகம் விளக்கமளிக்கையில், ‘கேரளாவில் இருந்து தனது 90 வயது தாயாரை அழைத்துக்கொண்டு விமானத்தில் வருவதால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாகப் பங்கேற்கவில்லை என்றாலும், சசி தரூரின் தொடர் புறக்கணிப்பு நடவடிக்கை அவர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

