ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26), போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் (28) மோதினர். துவக்கம் முதல் அதகளப்படுத்திய அலெக்ஸ் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னீஸ் (30), செக் வீரர் ஜிரி லெஹெக்கா (23) மோதினர். அனுபவம் வாய்ந்த லெஹெக்கா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஆர்தர் எளிதில் வென்றார். இருப்பினும் 2வது செட் கடும் இழுபறியாக இருந்ததால், டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை கடும் போராட்டத்துக்கு பின், 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் ஆர்தர் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.