ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 7 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி சீனா பயணம்: புடின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலக தலைவர்களும் வருகை
புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் அடுத்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் என சுமார் 20 நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இந்தியா- சீனா எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்ட மோசமான மோதல் சம்பவத்துக்கு பின் இரு தரப்பு உறவிலும் விரிசல் எழுந்தது. பதற்றங்களை தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் சீனாவிற்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர் தொடர்பாக மேற்கத்திய நாட்டு தலைவர்கள் பலரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமிருந்து விலகி இருந்தனர். எனினும் ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் அதிபர் புடினுடன் மேடையை பகிர்ந்து கொண்டார். புவிசார் அரசியல் மாற்றங்கள் இந்தியாவையும், சீனாவையும் பேச்சுவார்த்தையை நோக்கி அழுத்தம் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எல்லைப்பதற்றங்களை தணிப்பது, டிரம்ப் நிர்வாகத்தினால் இந்தியா மீது விதிக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட கட்டண அழுத்தம் உள்ளிட்டவை பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான சந்திப்பின் எதிர்பார்ப்புக்களை அதிகரித்துள்ளன. இந்த சந்திப்பின்போது வீரர்களை திரும்ப பெறுதல், விசா தளர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.