17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமறைவு சாமியார் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?: சிசிடிவி காட்சிகளை அழித்ததால் பரபரப்பு
புதுடெல்லி: டெல்லியில் 17 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார், தனது உருவத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மேலாண்மைக் கல்லூரியின் இயக்குநராக இருந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்பவர், அங்கு கல்வி உதவித்தொகையில் படித்த 17 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, தகாத முறையில் பேசுவது, அத்துமீறித் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், தனது பதவியைப் பயன்படுத்தி மாணவிகளை மிரட்டியதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டன. இது தவிர, கல்லூரியின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தி சொகுசு வாகனங்கள் வாங்கியது உள்ளிட்ட நிதி முறைகேடுகளிலும், போலி ஆவணங்களுடன் சொகுசு காரைப் பயன்படுத்திய மோசடியிலும் ஈடுபட்டதாக அவர் மீது தனித்தனியாக வழக்குகள் உள்ளன.
ஏற்கனவே 2009 மற்றும் 2016ம் ஆண்டுகளிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி, ஜாமீனில் வெளிவந்தவர் இவரை போலீசார் தேடி வரும் நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் கைதாவதில் இருந்து தப்பிக்க, தனது உருவத்தை மாற்றிக்கொண்டும், பல்வேறு புனைப்பெயர்களைப் பயன்படுத்தியும் இருக்கலாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ‘அவர் மின்னணு சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பதால், இருப்பிடத்தைக் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரியின் சிசிடிவி கேமரா பதிவுகளை தொலைவில் இருந்தே இயக்கி, முக்கிய ஆதாரங்களை அழித்திருக்கலாம்’ என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. கடைசியாக லண்டன், மும்பை, ஆக்ரா ஆகிய இடங்களில் அவர் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.