புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைப்பதாகவும், பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக்கழக வளாகத்தில் கையில் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் வெங்கட்ராவ், இன்ஸ்பெக்டர் தனசேகரன், பேராசிரியர் உமையாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்காததால், போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி. வம்சீரதரெட்டி சம்பவ இடத்துக்கு வந்தபோது, மாணவர்கள் அவரை சிறைபிடித்தனர்.
பிறகு, காலாப்பட்டு காவல் நிலைய போலீசார் நள்ளிரவு 2 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தனர். அப்போது, மாணவர்கள், போலீசாரின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி, 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரியும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து 2வது நாளான நேற்றும் புதுவை பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனிடையே, நள்ளிரவு கைது செய்யப்பட்ட 6 மாணவிகள், 18 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மீது அத்துமீறி நுழைந்தது, பாதுகாவலரை தாக்கியது, அரசு அதிகாரியை அடைத்து வைத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து மற்ற மாணவர்களை வழக்கில் சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, நேற்று மாலை சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்கலைக்கழக வளாகத்தில் பேரணி நடந்தது. மாணவிகள் விடுதி அருகே தொடங்கிய பேரணி, பாண்லே கடை அருகே நிறைவடைந்தது. அப்போது, மாணவ-மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.