லண்டன்: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.
ஹைதர் அலி பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் 'ஏ' அணியான 'பாகிஸ்தான் ஷாஹீன்ஸ்' அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த ஹைதர் அலி, கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹைதர் அலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து விசாரணை முடியும் வரை ஹைதர் அலி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் இங்கிலாந்து சட்டங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தவுடன் அவர் மீது வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.