Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாலியல் டார்ச்சர் செய்த பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாணவி அழ காரணமான பல்கலையின் பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் காரை என்றொரு பிராந்தியம் இருக்கு.. புதுமை பல்கலை.யின் காரை கிளையில் உயர்கல்வி பயிலும் மாணவி அழுதபடி பேசும் ஒரு ஆடியோ வலைதளத்தில் வைரலாகிறதாம்.. துறை சார்ந்த பேராசிரியரின் ஆபாச இசைவுக்கு செவி சாய்க்காவிடில் இன்டெர்னலில் கை வைப்பதாக வந்த மிரட்டல் குறித்து அவர் பதிவிட்டுள்ளாராம்.. மேலும் சில மாணவிகளும் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த புகார்கள் எழ, மாணவியின் ஆடியோவையே புகாராக ஏற்று பல்கலை. நிர்வாகமும், காக்கியும் உரிய நடவடிக்கைகயை உடனே எடுக்க வேண்டுமென மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்.. முதல்கட்ட விசாரணையை மகளிர் ஆணையம் துவங்கியுள்ள நிலையில், பெயளரவில் முடித்துவிடாமல் கடுமையான நடவடிக்கைகள் தேவை என பாதிக்கப்பட்ட மாணவிகள் காத்திருக்கிறார்களாம்.. இது ஒருபுறமிக்க பிற உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக முணுமுணுப்புகள் கசிந்தபடி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூன்று ஸ்டேட் பார்டர் ஊர்ல கையில் முட்டையோட வந்த லேடி குட்காவோடு சிக்கிட்டாங்களாம்.. ஆனா, சொகுசு கார்ல கடத்துனவங்க யாருன்னுதான் விசாரணை போயிட்டிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகான்னு 3 ஸ்டேட் எல்லைகளை கொண்டிருக்குது.. இதுல ஆந்திராவுல இருந்து காட்டன் சூது, கட்டை, மணல் கடத்தல்னு அதிகமாக நடக்குதாம்.. இந்த எல்லைகள்ல இப்ப அதிகமாக புகார் வர்ற பார்டராக காட்டுப்பாடி பக்கத்துல முத்துல தொடங்கி குப்பத்துல முடியுற பார்டர்தான் இருக்குதாம்.. இந்த வழியாகத்தான், கடத்தல் அதிகமாக நடக்குதாம்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு லேடி கையில மூட்டையோட அந்த பார்டரை கடந்து வந்திருக்காங்க.. என்னடா இது பார்டரை கடந்து நடந்தே ஒரு லேடி வர்றாங்களேன்னு காக்கிகள் சந்தேகப்பட்டு, சோதனை செஞ்சிருக்காங்க.. அதுல குட்கா கடத்தி வந்தது தெரியவந்ததும் கையும் களவுமாக பிடிச்சுட்டாங்க.. பாராட்டுதான். ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த பார்டர் செக்போஸ்ட்ல சொகுசு கார் ஒன்னு வேகமாக பேரிகார்டுகளை இடிச்சு தள்ளிட்டு மின்னல் வேகத்துல பறந்திருக்குது.. அந்த சொகுசுகார்ல கடத்துனது என்னவென்று, விசாரணை போய்கிட்டிருக்குது.. அதாவது இந்த பார்டர்ல காக்கிகள் டீமை பலப்படுத்துனாவே, ஏகப்பட்ட கடத்தல்களை முற்றிலும் தடுக்க முடியும்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.. இதனால மாவட்ட தலைமை காக்கி பார்டர் செக்போஸ்டை பலப்படுத்தணும் கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ருசி கண்ட பூனையாக சில ஓட்டல்களை குறி வைத்து அடிக்கடி குடும்பத்தோடு சென்று சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் காக்கி பெண் அதிகாரி ஒருவர் கம்பி நீட்டுவதாக புகார் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாநகரில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேசனில் தூத்துக்குடிக்கு பெயர்பெற்ற ஆபரணத்தை முன் பாதியாகவும், திருமகளை பின் பாதியாகவும் கொண்ட ஒரு பெண் இன்ஸ்பெக்டர் பணிபுரிகிறாராம்.. இவரு, ஓட்டல்களுக்கு சென்று விதவிதமாக உணவை வாங்கி, ஓசியில் சாப்பிட்டு வருகிறாராம்.. சில ஓட்டல்களில் ருசி நன்றாக இருந்தால் அந்த ஓட்டலுக்கு மீண்டும் மீண்டும் சென்றுவிட்டு பில் கொடுக்காமல் டாடா காட்டிவிடுகிறாராம்.. சமீபகாலமாக குடும்பத்தினரையும் அழைத்து சென்று சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் கம்பி நீட்டி விடுகிறாராம்.. பெண் இன்ஸ்சின் இந்த நடவடிக்கையால் ஓட்டல் உரிமையாளர்கள் டென்சனில் இருக்கிறார்களாம்.. இவர் இதற்கு முன்பு வேலை செய்த ஸ்டேசன் லிமிட்டில் நகைக்கடை அதிபர் ஒருவர் நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்தாராம்.. அப்போது கொள்ளையர்களை பிடிக்க வடமாநிலத்திற்கு செல்ல வேண்டி இருந்ததாம்.. ரயிலில் எல்லாம் போக முடியாது. பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தாதான் போக முடியும்னு அடம்பிடித்து செலவுக்கும் நகை கடை அதிபரிடம் பணத்தை கறந்துவிட்டாராம்.. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் போனதாம்.. இப்ப ஓட்டல் உரிமையாளர்கள் பெண் இன்ஸ் மேல் புகார் கொடுக்க தயாராகிட்டு வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யூனியன் பிரதேசத்தில் சங்கத்தை வைத்து கோடிகோடியாக குவிக்கும் எம்எல்ஏ மீண்டும் தேர்தலில் நிற்க தயாராகி வர்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘2021 சட்டமன்ற தேர்தலில் யூனியன் பிரதேசமான உழவர்கரை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவானவர் சிவன் பெயரை கொண்டவர். வணிகர் சங்க பொறுப்பாளராகவும் களம்கண்டார். தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்னு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிதெளித்து வெற்றியும் பெற்றுவிட்டார். ஆரம்பத்தில் 6 மாதம் தொகுதி பக்கம் சென்று வந்தவர், பின்னர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். சட்டசபையிலும் தொகுதி பிரச்னைகள் குறித்து பெயரளவுக்கு பேசிவிட்டு, வணிகர் நலவாரியத்துக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும், ஜிஎஸ்டி விலக்கு என வியாபாரிகளுக்கு மட்டுமே குரல் கொடுத்தாராம்.. இவரை தேர்ந்தெடுத்தது மக்களா இல்லை வணிகர்களா என்கிற அளவுக்கு போய்விட்டதாம்.. இதனால் தொகுதியில் படிப்படியாக எதிர்ப்பு எழுந்துருக்கு.. எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கல.. தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் தொகுதியில் நிற்கும்பட்சத்தில் வாக்கு கேட்டு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனராம்..

ஆனால், மீண்டும் லாட்டரி அதிபரின் மகனிடம் கோடிக்கணக்கில் வாங்கிக்கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்க தயாராகி வருகிறாராம்.. இதற்காக வணிகர்கள் கூட்டம் என்ற பெயரில் வசூல் செய்து முடித்துவிட்டாராம்.. அதோடு தான் உறுப்பினராக உள்ள புதுவை சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பில் உள்ள 15 உறுப்பினர்களையும் சங்க கூட்டத்திற்கு அழைத்தாராம்.. ஆனா அவங்க சுயநலத்திற்கு துணை போகாமல் புறக்கணிச்சுட்டாங்களாம்.. சுயநலமாக செயல்படும் இவரை ஆரம்பத்தில் இருந்தே புல்லட்சாமி தவிர்த்து வருகிறாராம். சங்க கூட்டத்துக்கு வந்திருந்த மற்றொரு எம்எல்ஏவும், வணிகர்களும் புல்லட்சாமி அரசில் ஆட்சியாளர்களும், பல அரசு அதிகாரிகளும் ஊழலில் திளைத்து வர்றாங்க.. இந்த அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என ஒரே குரலை எதிரொலிச்சாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.