பாலியல் உறவுக்கு முன்பே ஜாதகம் பார்த்திருக்க வேண்டாமா? காவல்துறை அதிகாரிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சுவாரசிய கருத்து
புதுடெல்லி: பீகார் மாநிலத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரும், துணை கண்காணிப்பாளர் ஒருவரும் கடந்த 2014ம் ஆண்டு ஒரே மாவட்டத்தில் பணியாற்றியபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த டி.எஸ்.பி.யை திருமணம் செய்து கொள்வதாக எஸ்.பி உறுதியளித்ததன் பேரில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் எஸ்பி மீது அந்த பெண் டி.எஸ்.பி. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பெண் அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ இருவரின் ஜாதகங்களும் பொருந்தவில்லை என்று கூறி எஸ்பி திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘ நட்சத்திரங்கள் பொருந்தவில்லை என்றால், நல்ல திருமண வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?. இருப்பினும் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பே நீங்கள் ஜாதகங்களைப் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும் அல்லவா?. திருமணம் செய்யும் நேரத்தில் தான் ஜோதிடரை அணுகுவீர்களா என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பெண் அதிகாரி தரப்பு வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் அவர் வற்புறுத்தப்பட்டே பாலியல் உறவுக்கு சம்மதிக்க வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் டிஎஸ்பியான நீங்கள் வற்புறத்தப்பட்டீர்கள் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். உங்களிடம் இதுபோன்ற வழக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்ட நீதிபதிகள், ”இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதுவது என்பது யாருக்கும் பயன் கிடையாது. இருவருக்கும் இடையே சுமூகமான தீர்வை எட்டுவதற்காக, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டலை மத்தியஸ்தராக நியமிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
