மதுரை: அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் உயர்மட்டக்குழுவும், பள்ளி அளவில் பள்ளி குழுவும் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் அமைக்கப்பட்ட மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமங்கள் முறையாக செயல்படுவதில்லை. எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமத்தை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தரப்பில், மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 14417 என்ற இலவச தொலைபேசி எண் உள்ளது. அதோடு 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை தொடர்பு கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது.
இதற்கென 60 பயிற்சி பெற்ற நபர்கள் பணியில் உள்ளனர். 2023-24ல் 1,95,791 ஆசிரியர்கள், 1,33,243 ஊழியர்கள், 2024-25ல் 2,00,709 ஆசிரியர்கள், 1,37,928 பிற ஊழியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்பதால் மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.