சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ல் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் அண்ணாநகர் கராத்தே, ஜூடோ தற்காப்புக் கலை பள்ளியின் உரிமையாளர் கெபிராஜ் மீது 2021ல் புகார் அளித்திருந்தார். அண்ணா நகர் மகளிர் போலீசார், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
தண்டனை குறித்த விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜரானார். அரசு சிறப்பு வழக்கறிஞர், பாலியல் துன்புறுத்தல் செய்தாலே அது பாலியல் பலாத்காரம்தான் என்று பல்வேறு நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளது என்றார்.அப்போது, நான் எந்த மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில்லை. 7 ஆண்டுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு காரணமாக தனது குடும்ப மானம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கெபிராஜ் நீதிமன்றத்தில் கதறி அழுதார். இதையடுத்து, அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 50,000 அபராதம் விதித்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.