பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் குற்றங்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் இத்தகைய கொடுமை நடைபெற்று வருகிறது.
பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை கைது செய்ய 7 தனிப்படைகளை காவல்துறை அமைத்திருக்கிறது. இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இளைஞர்களிடையே காவல்துறையினர் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு, மகளிருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும். இனி எவரும் சுலபமாக இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு முதல்வர், காவல்துறையினருக்கு உரிய ஆணைகளை வழங்க கேட்டுக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
