பாலியல் குற்றச்சாட்டு இளவரசர் ஆன்ட்ரூவின் பட்டங்களை பறிக்க நடவடிக்கை: வீட்டை காலி செய்ய மன்னர் சார்லஸ் உத்தரவு
லண்டன்: யார்க் இளவரசரான ஆன்ட்ரூ, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனுமாவார். ஆன்ட்ரூ மற்றும் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் மீது அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா க்யூப்ரே என்ற பெண், பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், வர்ஜீனியா க்யூப்ரே கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஆன்ட்ரூ மீது பாலியல் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தம்பி ஆன்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வௌியிட்ட அறிக்கையில், “இளவரசர் ஆன்ட்ரூவின் உடை, படங்கள் மற்றும் அவருக்கான கவுரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இளவரசர் ஆன்ட்ரூ இனி ஆன்ட்ரூ மவுன்ட்பேட்டன் வின்ட்சர் என அழைக்கப்படுவார். அவர் தங்கியிருந்த வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனி அவர் தனியார் தங்குமிடத்துக்கு செல்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
