Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வெள்ள நீரை வெளியேற்றும் உத்தண்டி மூடுகால்வாய் திட்டம் கால்வாய் மூலம் கழிவுநீர் கடலில் கலக்க வாய்ப்பு? சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: மழைகாலங்கள் வந்தாலே சென்னை மக்களுக்கு ஒரு போதாத காலம் என்று தான் சொல்வார்கள். அதன்படி, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை திரும்புவது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. இதற்கு காரணம், கடல் பரப்பும், சென்னையின் நிலப்பரப்பும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் தேங்கும் வெள்ள நீர் அனைத்தும் கால்வாய்கள் மூலமே கடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் பார்த்தால், கால்வாய்கள் இல்லாவிட்டால் மழைநீரை வெளியேற்றுவது சவாலாக மாறிவிடும். இந்த கால்வாய் அனைத்தும் சென்னையில் உட்பகுதியில் ஓடக்கூடிய பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் ஆறு ஆகிய 3 முக்கிய ஆறுகளில் கலக்கும் வகையில் இணைக்கப்பட்டிருக்கும். எனவே மழைகாலங்களில் கால்வாய்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

மழைகாலங்களை பொறுத்தவரை தென்சென்னையில் உள்ள 61 ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகிறது. அங்கிருந்து விநாடிக்கு 8,500 கனஅடி வெள்ளநீர் வெளியேறி, ஒக்கியம் மடுவு வழியாக தெற்கு பக்கிங்காம் கால்வாயை அடைகிறது. இக்கால்வாயில் இருந்து விநாடிக்கு 7,000 கனஅடி நீரை மட்டுமே வங்க கடலுக்கு அனுப்ப முடியும்.

தெற்கு பக்கிங்காம் கால்வாய் 24 கி.மீ., நீளம் உடையது. அதில், ஒக்கியம் மடுவு 10.5 கி.மீ.,யில் வந்து இணைகிறது. இங்கிருந்து வெள்ளநீர், கடல்நீரை அடைவதற்கு 13.5 கி.மீ., பயணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிகப்படியாக தண்ணீர் சென்றால், தெற்கு பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளான வேளச்சேரி, ராம்நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், வெள்ளநீர் அதிகளவில் தேங்கி பாதிப்பு ஏற்படும்.

இதை தடுக்க, உத்தண்டி கடல்சார் பல்கலை அருகில் இருந்து 1.2 கி.மீ.,க்கு மூடுகால்வாய் அமைத்து கிழக்கு கடற்கரை சாலையை கடந்து, வங்க கடலில் வெள்ளநீர் கொண்டு சேர்க்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் மூலம் விநாடிக்கு 500 கனஅடி நீரை வெளியேற்றலாம் என, நீர்வளத் துறை கணித்துள்ளது. இந்த கால்வாய் அமைக்கும் பணிக்கு நீர்வளத் துறைக்கு ரூ.91 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், பக்கிங்காம் கால்வாயில் உள்ள மழைநீர், பழனிவாக்கம் ஏரி மற்றும் ஒக்கியம் மடுவு போன்ற இடங்களில் தேங்குவதைத் தடுத்து, சென்னையின் தெற்குப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.  இந்த கால்வாய் செயல்பட தொடங்கினால், வினாடிக்கு 500 கனஅடி நீரை வெளியேற்ற முடியும். இதனால், சென்னையின் தெற்கு பகுதிகளில் வெள்ளம் தேங்குவது குறையும். இந்த கால்வாய் அமைப்பதால் மழைநீரை வெளியேற்ற உதவும் என்றாலும், அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பக்கிங்காம் கால்வாயிலிருந்து உபரி நீரை குடியிருப்புப் பகுதிகள் வழியாக கடலுக்குத் திருப்பிவிட 1.2 மீட்டர் நீளமுள்ள வெட்டப்பட்ட மற்றும் மூடிய கால்வாய் திட்டத்தால், உத்தண்டி குடியிருப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. இந்த திட்டம் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பருவமழை காலங்களில் புயல் சின்னம் உருவாகும்போது, கடலில் சீற்றம் ஏற்படும். அப்போது, பக்கிங்காம் கால்வாயில் இருந்து நீர் வடியாது. விநாடிக்கு 200 கனஅடி வெளியேறினால் கூட பெரிய விஷயம் தான். மழைக்காலம் முடிந்த பின், கடலில் இருந்து மூடுகால்வாய்க்குள் நீர் செல்லும். அதனுடன் மணல் சென்று அடைத்துக் கொள்ளும். மூடுகால்வாய் என்பதால், மணல் அடைப்பை சரி செய்யவும் வாய்ப்பில்லை.

இந்த சாத்தியக்கூறுகளை ஆராயாமல், இந்த திட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் ஒருபகுதியை பயன்படுத்தி தெற்கு பகிங்காம் கால்வாயை முழுமையாக துார்வாரினால், 5 ஆண்டுகளுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. இப்போதும் ஒன்றும் முடிந்துவிடவில்லை. முறையாக ஆய்வு செய்த பின் பணிகளை தொடங்க வேண்டும். மேலும், ஆமைகள் கூடு கட்டும் இடங்கள், அலைகளுக்கு இடையேயான மண்டலங்கள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரம் போன்ற சுற்றுச்சூழல் ரீதியாக பாதிப்புகளை இந்த கால்வாய் ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல, இந்த கால்வாய் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். மேலும், கால்வாய் மூலம் கழிவுநீர் கலந்த நீர் கடலில் கலப்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். மேலும், குடியிருப்பு பாதை வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டவுடன், மாசுபாடு தவிர்க்க முடியாததாகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* வெள்ள நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும்

இந்த திட்டம் தொடர்பான ஆய்வின் போது, அண்ணா பல்கலைக்கழக குழு பக்கிங்காம் கால்வாயில் இருந்து தண்ணீர் எடுத்து, அதன் தரத்தை சோதித்தது. இந்த கால்வாய் சென்னையின் முக்கிய நீர் வழித்தடங்களில் ஒன்று. ஆனால், இதில் தினமும் 55 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால், 60 சதவீத மாசு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த புதிய கால்வாய் வெள்ள நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும், மாசு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பள்ளிக்கரணை, வேளச்சேரி, உத்தண்டி போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் கடலுக்கு விரைவாகச் செல்லும். கடல் நீர் உள்ளே வராமல் தடுக்கப்பட்டு, நிலத்தடி நீர் சுத்தமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.