திருப்பூர் : திருப்பூரில், ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூர் நகரத்தின் மையப் பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கும் இந்த வாய்க்கால் சுமார் 2.5 கிலோ மீட்டர் பாளையக்காடு, கருமாரபாளையம் மற்றும் மண்ணறை வழியாக மூலிக்குளம் வந்து சேர்கிறது.
நகரத்தின் பகுதிகளின் வழியாக வருவதால் பல இடங்களில் புதர் மண்டியும், சாக்கடைகளால் சேறும் சகதியுமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேர்கள் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக குளம் நிறைந்து அப்பகுதி முழுவதும் நிலத்தடிநீர் செரிவூட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து நொய்யல் ஆற்று தண்ணீர் வருவதற்கு இடையூறாக மாறியது. மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் சாக்கடை கால்வாய் மூலம் நேரடியாக மூலிக் குளத்தில் கலந்து வந்தது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சாக்கடை கால்வாய் வழியாக கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் அமித், நேற்று மூலிக்குளத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தொழில்நுட்ப ரீதியாக சாக்கடை கால்வாய்கள் மூலி குளத்தில் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் வேர்கள் தன்னார்வ அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
இதுகுறித்து வேர்கள் அமைப்பின் சந்தீப் கூறுகையில், மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மூலிக்குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் செரிவூட்டுவது மட்டுமல்லாது பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் இயற்கையை ரசிக்கவும், அனுபவிக்கவும் நல்ல இடமாக அமைந்திருக்கிறது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய்களை தடுக்கும் பொருட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேர்கள் அமைப்பின் மூலம் குளம் முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு ஏற்ற பயனுள்ள இடமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.